சுருக்கம் (Abstract)
கேரளா மாநிலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மனித வள வளர்ச்சியிலும், சமூக நலத்திட்டங்களிலும் முன்னிலை வகிக்கும் மாநிலமாகும். இதன் தொடர்ச்சியாக 2025 ஆண்டுக்குள் கேரள மாநிலத்தில் தீவிர வறுமையை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் மாநில அரசு 2021-ஆம் ஆண்டு “தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் (Extreme Poverty Eradication Project - EPEP)” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியது.
இந்த திட்டமானது, உள்ளூர் தரவுகளின் அடிப்படையில், பல துறைகளின் இணைப்புடன் செயல்படுத்தப்பட்டது. உணவு, வீடு, வருமானம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி வாழ்ந்த 64,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு, வாழ்வாதார நிலைப்படுத்தத்திற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டது. 2025 நவம்பர் 1 ஆம் நாள் கேரளா “தீவிர வறுமையற்ற மாநிலம்” என்று அறிவிக்கப்பட்டது. இவ் ஆய்வு, கேரளாவின் ஆட்சிமுறை, மகளிர் குழுக்கள், மற்றும் சமூக அடிப்படையிலான சிறுகுறு திட்டங்கள் இணைந்து செயல்பட்டு மனித வள வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடைந்தமை குறித்து அரசுத் தரவுகள், ஆவணங்கள், செய்தி வெளியீடுகள் ஆகியவற்றின் அடிப்படைக் கொண்டு விளக்க முடியும். திட்டத்தின் உருவாக்கம், செயல்முறை, விளைவுகள் மற்றும் இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இதன் வளர்ச்சித் தாக்கம் ஆகியவற்றுடன், எதிர்கொண்ட சவால்கள், விமர்சனங்கள், மற்றும் நீடித்த செயல்திறன் குறித்தப் பதிவுகளையும் ஆராய்கிறது.
![]() |
| Picture Credit : Deshabhimani |
கேரள மாநிலம், அளவான நிகர வருமானம் கொண்ட மக்களைக் கொண்டிருந்தாலும் கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் முன்னேறிய மாநிலமாகவும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகவும் விளங்குகிறது. மாநில அரசால் தொடர்ந்து வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளில் அதிக முதலீடு, மக்கள் பங்கேற்பு கொண்ட ஆட்சி ஆகியவை இவ்வளர்ச்சிக்குக் அடிப்படையாக அமைந்துள்ளன. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தச் சூழலிலும் ஒப்பீட்டளவில் வாழ்வாதாரமற்ற சில குடும்பங்களை அரசு “தீவிர வறுமை” என்று வகைப்படுத்தியது.
நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, கேரளாவில் வெறும் 0.55% மக்கள் மட்டுமே வறுமையில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சராசரி எண்களுக்கு அப்பால் மீனவர் பகுதிகள், பழங்குடியினர், மற்றும் விளிம்புநிலைக் குழுக்கள் பல அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றமையை அரசு கண்டறிந்தது. இந்நிலையினைச் சீரமைக்க கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) அரசு, 2021-இல் “தீவிர வறுமை ஒழிப்பு திட்டம்” என்ற இலக்கு சார்ந்த புதிய முயற்சியைத் தொடங்கியது.
திட்டத்தின் நோக்கங்கள்
மனிதவளம் மற்றும் வாழ்வாதாரக் குறியீட்டில் கேரளாவை இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரியாகவும் நிலைநிறுத்த 2025க்குள் தீவிர வறுமையற்ற மாநிலமாக மாற்றுவது என்பது இத்திட்டத்தின் இலக்காக வரையறுக்கப்பட்டது.
பின்னணி மற்றும் கொள்கை அடிப்படை (Background and Policy Context)
கேரளாவில் வறுமை ஒழிப்புக்கான முயற்சிகளில் இத்திட்டம் புதியதல்ல. 1990களிலிருந்து கேரள அரசு மக்கள் திட்டம் முகாம் (People’s Plan Campaign), குடும்ப ஸ்ரீ திட்டம் (Kudumbashree Mission) போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இம்முயற்சிகள் மக்கள் தாமே தங்கள் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் ஒரு புதியவகை ஆட்சிமுறையை உருவாக்கின. இதன் மூலம், ஒவ்வொரு உள்ளூர் ஆட்சிக் குழுவும் (Local Self-Government – LSG) தங்கள் பகுதியில் மக்களுக்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகளை திட்டமிடவும், நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் பெற்றன.
2.1 குடும்ப ஸ்ரீ இயக்கத்தின் பங்களிப்பு
1998-ல் தொடங்கப்பட்ட குடும்ப ஸ்ரீ திட்டம், பெண்களின் அருகாமை குழுக்கள் (neighbourhood groups) மூலமாக, மாநிலம் முழுவதும் பெண்களை சமூக மாற்றத்தின் மையமாகக் கொண்டு ஒரு வலையமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு வழியாக, வறுமையில் இருந்த குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. “தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் (EPEP)” இந்த குடும்ப ஸ்ரீ அமைப்பின் அனுபவத்தையே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதாவது குடும்ப ஸ்ரீ குழுக்கள், உள்ளூர் ஆட்சிக் குழுக்கள், மக்கள்நலப் பணியாளர்கள், மற்றும் சமூக ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்டத் தரவுகளை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்குமானத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
2.2 வறுமையைப் பல கோணங்களில் பார்க்கும் புதிய அணுகுமுறை
2021க்குள், கேரள அரசு வறுமையை வெறும் வருமானம் இல்லாத நிலை குறித்த அணுகுமுறைகளில் போதாமையை உணர்ந்து, மருத்துவம், வீடு, சமூக இணைப்பு, கல்வி போன்ற பல துறைகளில் உள்ள பற்றாக்குறைகளை இணைத்துப் பார்க்க வேண்டியச் சிக்கல் என்பதை அடையாளம் கண்டது. இதன் காரணமாகவே, EPEP திட்டத்தின் மூலமாக அரசு “வறுமை குறைப்பு” என்ற நிலையைத் தாண்டி, “வறுமை ஒழிப்பு” என்ற முழுமையான இலக்கை நோக்கி நகர்ந்தது. இது “ஒருவரும் பின்னால் விடப்படக்கூடாது” என்ற அடிப்படையிலான நெறிமுறை மற்றும் நிர்வாக உறுதியாக அமைந்தது.
3. முறைமை மற்றும் செயல்பாடு (Methodology and Implementation)
3.1 திட்ட தொடக்கம் மற்றும் நிர்வாக அமைப்பு (Project Launch and Governance Structure)
தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் (EPEP) 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், உள்ளூர் தன்னாட்சித் துறை (Local Self-Government Department – LSGD) மூலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. மாநில அளவில் ஒரு முதன்மை வழிகாட்டுக் குழு (State-level Steering Committee) அமைக்கப்பட்டது. திட்டத்தின் செயல்பாடுகள்
- கிராம பஞ்சாயத்து (Gram Panchayat)
- பிளாக் பஞ்சாயத்து (Block Panchayat)
- மாவட்ட பஞ்சாயத்து (District Panchayat)
மூன்று அடுக்குத் தன்னாட்சி அமைப்புகள் வழியாக முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உள்ளூர் நிர்வாக அமைப்பும் ஒரு EPEP குழுவை அமைத்தது. இந்தக் குழு வீட்டுவசதி கணக்கெடுப்பு, குடும்பச் சரிபார்ப்பு, மற்றும் சிறு திட்டங்கள் (micro-plans) உருவாக்கும் பணிகளை மேற்கொண்டன. குடும்ப ஸ்ரீ குழுக்கள், மக்கள்நலப் பணியாளர்கள் (ASHA workers), அங்கன்வாடி ஆசிரியர்கள், மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து தரவுகள் சேகரிப்பு மற்றும் பின்தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
3.2 தீவிர வறுமை கொண்ட குடும்பங்களை அடையாளம் காணுதல் (Identification of Extremely Poor Households)
திட்டம் செயலாக்கத்தில் கேரளாவின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க சிறப்பிற்குரியது. வருமானம் மட்டும் அடிப்படையாக வைத்து வறுமை அளவிடப்படவில்லை. மாறாக, குடும்பங்கள் கீழ்க்கண்ட நான்கு முக்கிய குறிப்புகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன.
- உணவு பாதுகாப்பு (Food Security): தினசரி போதுமான மற்றும் சத்தான உணவைப் பெற முடியுமா?|
- வீடு (Housing): பாதுகாப்பான, நிரந்தர வீடு உள்ளதா?
- வாழ்க்கைத் திறன் / வருமானம் (Income/Livelihood): குடும்பத்தில் குறைந்தது ஒருவர் நிலையான வருமானம் ஈட்டுகிறாரா?
- ஆரோக்கியம் (Health): சிகிச்சை இல்லாத நீண்டநாள் நோய்கள் அல்லது தகுந்த ஆதரவின்றி வாழும் ஊனமுற்றோர் உள்ளனவா?
இந்த நான்கு குறிப்புகளிலும் பின்தங்கியிருந்த குடும்பங்கள் “தீவிர வறுமை குடும்பங்கள்” என வகைப்படுத்தப்பட்டன. இது ஐ.நா. அபிவிருத்தி திட்டம் (UNDP) பரிந்துரைக்கும் பல பரிமாண வறுமை (Multidimensional Poverty) கருத்தின் அடிப்படையில், கேரளாவின் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டது. 2021–2022ல் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட முதன்மை கணக்கெடுப்பில், மொத்தம் 64,006 குடும்பங்கள் (சுமார் 1,03,099 பேர்) தீவிர வறுமை நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குடும்பங்கள் ஒவ்வொரு வார்டு மட்டத்திலும் வரைபடமிடப்பட்டு, ஆன்லைன் கண்காணிப்பு செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்டன.
3.3 சிறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் (Micro-Planning and Intervention Design)
ஒவ்வொரு அடையாளம் காணப்பட்ட குடும்பத்திற்கும், அந்தந்த உள்ளூர் நிர்வாகக் குழுவே ஒரு சிறு திட்டம் (Micro Plan) தயாரித்தது. இந்தத் திட்டத்தில், குடும்பத்திற்குத் தேவையான உடனடி உதவிகளும், நீண்டகால தீர்வுகளும் குறிப்பிடப்பட்டன. இத்துடன் அரசு ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த பல திட்டங்களையும் புதிய நிதி உதவிகளையும் இணைத்தது.
- வீட்டுவசதி: LIFE Mission, PMAY போன்ற திட்டங்கள் மூலம் புதிய வீடுகள் கட்டுதல் அல்லது பழைய வீடுகளை சீரமைத்தல்.
- மருத்துவம்: கருண்ய ஆரோக்கிய பாதுகாப்புத் திட்டம் (Karunya Arogya Suraksha Padhathi) மூலம் சிகிச்சை உதவிகள், மருத்துவ முகாம்கள்.
- வாழ்க்கைத் திறன்: குடும்பச்ரீ மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் ஆதரவு.
- உணவு பாதுகாப்பு: இலவச ரேஷன் கிட்கள் (பெட்டிகள்), மதிய உணவு திட்டம், ஊட்டச்சத்து பொருட்கள்.
- சமூக இணைப்பு: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓய்வூதியம் போன்ற ஆவணங்கள் வழங்குதல்.
இந்தத் திட்டம் முழுக்க பகிர்ந்த பொறுப்பு (decentralized accountability) அடிப்படையில் செயல்பட்டது. ஒவ்வொரு பஞ்சாயத்தும் மாதந்தோறும் முன்னேற்றத்தைக் கண்காணித்தது.
3.4 கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (Monitoring and Evaluation)
Information Kerala Mission (IKM) ஒரு டிஜிட்டல் டாஷ்போர்டை உருவாக்கியது, இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் நிலைமையும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது. ஒரு குடும்பம் நான்கு துறைகளிலும் குறைந்தபட்ச அளவிலாவது முன்னேற்றம் அடைந்தால், அது “தீவிர வறுமையிலிருந்து விடுபட்டது” எனக் குறிக்கப்பட்டது. இந்த நிலைமையை உள்ளூர் கவுன்சிலும் மாவட்டக் குழுவும் இணைந்து சரிபார்த்தன.
அரசு, 2025 நவம்பர் 1ம் தேதி (கேரள உதய நாள்) முழுமையான வறுமை ஒழிப்பிற்கான இறுதி நாளாக அறிவித்தது. இது மாநிலத்தின் உருவாக்க நாளோடு இணைக்கப்பட்ட ஒரு சின்னமான (symbolic) இலக்கு எனக் கருதப்பட்டது.
Unnikrishnan and Shanida Beevi, beneficiaries of EPEP
| Picture Credit : thenewsminute |
4 முடிவுகள் மற்றும் சாதனைகள் (Results and Outcomes)
4.1 எண் அடிப்படையிலான முன்னேற்றம் (Quantitative Achievements)
2025 செப்டம்பர் மாதம் வரை வெளியிடப்பட்ட அரசுத் தகவலின்படி, 64,006 தீவிர வறுமைக் குடும்பங்களில் 55,861 குடும்பங்கள் (அதாவது 96.13%) ஏற்கனவே வறுமையிலிருந்து விடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்டது. 2025 அக்டோபர் மாதத்திற்குள், மொத்தம் 2,148 குடும்பங்கள் மட்டுமே இன்னும் செயலில் உள்ள திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தன. அவற்றையும் இலக்கு நாளுக்கு முன்பே நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
மாவட்ட வாரியான முன்னேற்றம்:
- கோட்டயம் மாவட்டம், 2025 ஜூன் மாதத்தில், மாநிலத்தின் முதல் “வறுமையற்ற மாவட்டம்” என அறிவிக்கப்பட்டது.
- அலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர் மாவட்டங்கள் அக்டோபர் 2025க்குள் 98%க்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு சாதனையை அடைந்தன.
- வயனாடு மற்றும் இடுக்கி போன்ற பழங்குடி மற்றும் கடற்கரை பகுதிகளில், நிலமின்மை மற்றும் தூரப்பகுதி பிரச்சனைகள் காரணமாக சில சவால்கள் இன்னும் தொடர்ந்தன.
4.2 நலத்திட்டங்கள் ஒருங்கிணைப்பு (Integration of Welfare Schemes)
- வீடில்லாமல் இருந்த குடும்பங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் LIFE Mission வழியாக புதிய வீடுகள் பெற்றனர்.
- 12,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடும்பச்ரீ வழியாக தொழில் பயிற்சி, சுயதொழில் ஆதரவு பெற்றனர்.
- COVID-19 காலத்தில் வழங்கப்பட்ட உணவு கிட்கள், பல குடும்பங்களுக்கு அடிப்படை பாதுகாப்பை வழங்கி, நீண்டகால தீர்வுகளுக்கான அடித்தளமாக அமைந்தன.
4.3 நிர்வாக மற்றும் நிறுவன வலிமை (Institutional Strengthening)
EPEP திட்டம் உள்ளூர் ஆட்சியில் ஒரு பெரிய திறன் மேம்பாட்டை ஏற்படுத்தியது. பஞ்சாயத்துகள் குடும்ப அளவிலான தரவுகளை நிர்வகிக்கும் திறனை பெற்றன. உள்ளூர் துறை, ஆரோக்கியம், வருமானம், சமூகநீதி துறைகள் ஆகியவற்றுக்கிடையில் நல்ல ஒத்துழைப்பு ஏற்பட்டது. இந்த பங்கேற்பு முறை, 1990களின் மக்கள் திட்ட இயக்கத்தின் (People’s Plan Campaign) உற்சாகத்தை மீண்டும் உயிர்ப்பித்தது. அது கேரளாவின் டிஜிட்டல் ஆட்சி மற்றும் சமூகத் திட்டமிடல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்தது.
5 விவாதம் மற்றும் விமர்சனங்கள் (Discussion and Critical Reflections)
5.1 இந்த மாதிரி ஏன் வெற்றி பெற்றது (Why the Model Worked)
கேரளாவின் வெற்றி நான்கு முக்கிய காரணங்களால் ஏற்பட்டது. அவையாவன,
- மக்கள் பங்கேற்பு அடிப்படையிலான ஆட்சி (Decentralized Governance): உள்ளூர் தன்னாட்சிக் குழுக்கள் வலுவாக செயல்பட்டன. அதனால் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் நிஜ தேவைகளுக்கேற்ப அமைக்கப்பட்டது.
- சமூக பங்கேற்பு (Community Participation): குடும்பச்ரீ போன்ற அமைப்புகள் மாநிலம் முழுவதும் உள்ள குடும்பங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டதால், யார் உண்மையில் உதவி தேவைப்படுகிறார்கள் என்பதைத் துல்லியமாக கண்டறிய முடிந்தது.
- இணைந்த அணுகுமுறை (Integrated Approach): வறுமையை ஒரே கோணத்தில் பார்க்காமல், உணவு, வீடு, வேலை, ஆரோக்கியம், சமூக நலம் என பல துறைகளைக் கூட்டு முயற்சியாகக் கருதியது.
- அரசியல் உறுதி (Political Commitment): மாநில அரசு 2025 என்ற தெளிவான இலக்கை நிர்ணயித்தது. இதனால் திட்டத்துக்கு அவசரம், பொறுப்பு உணர்வு, மற்றும் வெளிப்படைத் தன்மை வந்தது.
இந்த நான்கு காரணிகளும் சேர்ந்து, கேரளாவின் நலத்திட்டங்களை சிதறலான திட்டங்களிலிருந்து ஒரே இணைந்த இயக்கமாக மாற்றின.
5.2 சவால்கள் மற்றும் விமர்சனங்கள் (Challenges and Critiques)
- தரவு வெளிப்படைத் தன்மை (Data Transparency): சில பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக அமைப்புகள், திட்டத்தின் சர்வே (survey) தரவுகள் மற்றும் மதிப்பீட்டு முறைமைகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
- பழங்குடியினர் சேர்ப்பு (Tribal Inclusion): வயனாடு, இடுக்கி போன்ற பகுதிகளில் சில நிலமற்ற பழங்குடி குடும்பங்கள் இன்னும் அரசு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
- நிலைத்தன்மை (Sustainability): ஒருமுறை உதவிகள் நிறுத்தப்பட்ட பின், சில குடும்பங்கள் மீண்டும் வறுமைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கான தொடர்ந்து கண்காணிப்பு அவசியம்.
- அளவீட்டு வரம்புகள் (Subjective Thresholds): “தீவிர வறுமை” என்ற சொல் அரசின் நிர்வாக வரையறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டதால், அது தேசிய அல்லது சர்வதேச அளவுகோல்களுடன் நேரடியாக ஒப்பிட முடியாது எனக் கூறப்படுகிறது.
5.3 ஒப்பீட்டு பார்வை (Comparative Perspective)
5. 4 பாலினம் மற்றும் சமூக இணைப்பு (Gender and Social Inclusion Dimensions)
- நில மற்ற தலித் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன
- திருநங்கைகள் தொழில் பயிற்சி மற்றும் வாழ்வாதார உதவி பெற்றனர்.
- மாற்றுத்திறனாளிகள் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்குள் சேர்க்கப்பட்டனர்.
இவை அனைத்தும் கேரளாவின் வளர்ச்சி ஒரு பொருளாதார முன்னேற்றம் மட்டும் அல்ல, சமூக ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதையும் காட்டுகின்றன.
முடிவு (Conclusion)
“தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் (Extreme Poverty Eradication Project)” என்பது, கேரள அரசின் நலன்வாய்ந்த திட்டங்களில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இது மக்கள் பங்கேற்பு, தரவு சார்ந்த திட்டமிடல், மற்றும் சமூக நீதி ஆகியவற்றை ஒரே மேடையில் இணைத்த ஒருங்கிணைந்த வளர்ச்சி முயற்சி ஆகும். இந்த முயற்சி வறுமை ஒழிப்பை ஒரு புள்ளிவிவர இலக்கு என்றல்லாமல் ஒவ்வொரு குடும்பமும் மரியாதையுடன், நிலையான வாழ்க்கை நடத்தும் நிலைக்கு வரவேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கமாக அமைந்தது. 2025க்குள், கேரளா தன்னுடைய “வறுமையற்ற மாநிலம்” என்ற இலக்கை அடையவிருக்கிறது. இது இந்தியா முழுவதும் சமூக நல திட்டங்களுக்கான ஒரு புதிய மாதிரியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்குப் பிறகும் சில பணிகள் மீதமிருக்கின்றன. குறிப்பாக பழங்குடி, கடற்கரை, மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் பகுதிகளில் நீடித்த கண்காணிப்பு மற்றும் ஆதரவு அவசியமாக உள்ளது.
EPEP திட்டத்தின் உண்மையான வெற்றி, குடும்பங்கள் மீண்டும் வறுமைக்கு திரும்பாமல் இருக்கும்போது தான் நிரூபிக்கப்படும். அதற்காக, அரசு, குடிமக்கள், மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும். “வளர்ச்சி என்பது உற்பத்தி மற்றும் லாபம் பற்றியதல்ல; அது ஒவ்வொருவரின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியது.” எனும் செய்தியை கேரள அரசு வெளிப்படுத்தி நிற்கிறது.
References
- NITI Aayog. National Multidimensional Poverty Index
2021. Government of India.
- The Economic Times. “Kerala will soon be free of extreme poverty, says govt.” 19 Oct 2025.
- Isaac, T.M. Thomas & Franklin, P. (2000). Decentralised Planning
and Development in Kerala. Oxford University Press.
- Local Self-Government Department (LSGD). Extreme Poverty
Eradication Project (EPEP) Overview. 2021.
- Government of Kerala. Kerala Calling – September 2025 Edition.
Public Relations Department.
- LSGD Dashboard Data 2023. https://lsgd.kerala.gov.in/en/priority-projects-initiatives/epep/
- Information Kerala Mission (IKM). EPEP Monitoring
Framework. 2024.
- The New Indian Express. “Kerala to be declared extreme-poverty-free from Nov 1.” 31 Oct 2025.
- Government of Kerala. PRD Report, Sept 2025, p. 12.
- Mathrubhumi English. “Kerala becomes India’s first state to eradicate extreme poverty.” 22 Oct 2025.
- The Times of India. “Kottayam first zero-poverty district in state.” 29 Jun 2025.
- LIFE Mission Annual Report 2024. Housing Department, Government of Kerala.
- Indian Express. “Homes, medicine, food kits behind Kerala’s poverty-eradication drive.” 2024.
- Kerala Institute of Local Administration (KILA). EPEP
Evaluation Report. 2025.
- PRD Kerala. Kerala Calling, Sept 2025
special issue on EPEP.
- The New Indian Express. “Experts seek transparency on Kerala poverty data.” 27 Oct 2025.
- The New Indian Express. “Tribal groups rubbish Kerala govt’s poverty-free claim.” 27 Oct 2025.
- Centre for Development Studies (CDS). Policy Brief on
Sustainability of Poverty Eradication. 2025.
- CEPAL (UN Economic Commission for Latin America and the Caribbean). Conditional
Cash Transfer Programmes in Latin America. 2019.
- Kudumbashree Mission. Gender and Poverty Eradication Report.
2025.
- Social Justice Department, Kerala. Inclusive Livelihood Initiatives Under EPEP. 2025.
ஜெசின் ஜெ
ஆய்வாளர்,
பொருளாதாரத் துறை,
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி (தன்னாட்சி),
நாகர்கோவில்.
#kerala #LDFGovernment #cpimkerala #PovertyEradication #CMPinarayiVijayan


